News ·

யோஷித ராஜபக்ஷ வழக்கு: ஜூன் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்ஷ வழக்கு: ஜூன் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

April 24 (Citizen News) - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஆஜரான அரச சட்டத்தரணி, இந்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு 08 ஆம் இலக்க மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார். 

அந்த வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், இந்த வழக்குக்கும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான முன்னேற்றங்களை அறிவிப்பதற்கு கால அவகாசம் கோரிய அரச சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் 31 முதல் 2013 டிசம்பர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், வருமானம் ஈட்டிய முறையை வெளிப்படுத்த முடியாத 59 மில்லியன் ரூபாவிற்கும் அதிகப்படியான பணத்தை, மூன்று தனியார் வங்கிகளின் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சட்டமா அதிபரினால் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read next