Sport ·

ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடாது

ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடாது

February 03 (Citizen.lk News) - இந்த வருட ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் எனவும் ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

சுமார் ஒரு வாரம் நீடித்த நிச்சயமற்றத் தன்மைக்கு பின்னர் பாகிஸ்தான் அரசாங்கம் தனது அணியை ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற அனுமதிக்க இன்று முடிவுசெய்தது.

ஆனால், பெப்வரி 15ஆம் திகதி இந்தியாவை எதிர்த்தாடாமல் இருக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.

தனது பரம வைரியான இந்தியாவை பி குழுவுக்கான முதலாவது சுற்றில் பாகிஸ்தான் எதிர்த்தாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

'ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் பங்குபற்றுவதற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக பெப்ரவரி 15ஆம் திகதி அட்டவணை படுத்தப்பட்டுள்ள போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களம் இறங்காது' என பாகிஸ்தான் அரசாங்கத்தின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து பங்களாதேஷ் விலகியதை அடுத்து ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கும் நிலை தோன்றியதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரிபை கடந்த திங்களன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரும் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி சந்தித்தார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விடயம் குறித்து பிரதமரிடம் விளக்கியதாக இந்த சந்திப்பின் பின்னர் குறிப்பிட்ட நக்வி, இது தொடர்காக வெள்ளிக்கிழமை அல்லது திங்களன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்தை இணைத்ததை அடுத்து பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அயல் நாடுகளான இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அரசியல் உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணத்தைக் காட்டி இந்தியாவுக்கு செல்ல முடியாது என பங்களாதேஷ் அறிவித்தது. அதன் பின்னர் பங்களாதேஷுக்கு பதிலாக  உலகக் கிண்ணத்தில்  ஸ்கொட்லாந்து  இணைத்துக்கொள்ளப்பட்டதாக ஜனவரி 24ஆம் திகதி ஐசிசி அறிவித்தது.

தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதனை நிராகரித்த ஐசிசி, உலகக் கிண்ணப் போட்டி நெருங்கிவரும் நிலையில் இடத்தை மாற்றுவதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்திருந்தது.

Read next