September 10, (Citizen News) - செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை, அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவானது, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பங்காண்மையுடன் 2026 EducationUSA பல்கலைக்கழக கண்காட்சியினை கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் நடத்தவுள்ளது. இவ்விலவசக் கண்காட்சிகள், கற்கைநெறிகளுக்கு அனுமதிக்கப்படுவதற்குத் தேவையான தகுதிகள், புலமைப்பரிசில்கள் மற்றும் பல்வேறு கற்கைநெறிகள் தொடர்பான விவரங்கள் என்பன பற்றி கலந்துரையாடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட பதினொரு அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் இலங்கை மாணவர்களை நேரடியாக இணைக்கும். இதன்போது, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல், கணினி விஞ்ஞானம் மற்றும் இணையப் பாதுகாப்பு, உயிரித் தொழில்நுட்பம் மற்றும் பிற கற்கைத் துறைகள் உள்ளிட்ட, அதிக தேவையுடைய துறைகளிலுள்ள பல்வேறு கற்கை நெறிகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் மாணவர்களுக்குக் கிடைக்கும். அமெரிக்க உயர்கல்வி குறித்த அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களின் மூலமான EducationUSA, மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் கல்வி கற்பது தொடர்பான நம்பகமான வழிகாட்டுதலையும் வளங்களையும் வழங்கும்.
இளமானி, முதுமானி மற்றும் கலாநிதிக் கற்கை நெறிகளில் ஆர்வமுள்ள மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகளுடன் கலந்துகொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். இலங்கைப் பிரஜைகளுக்குக் கிடைக்கக்கூடிய ஃபுல்பிரைட் புலமைப்பரிசில்கள் மற்றும் உயர்புலமைப்பரிசில்கள் குறித்த தகவல்களை US-SLFC பிரதிநிதிகள் பகிர்ந்துகொள்வார்கள். அனுமதி இலவசம், எனினும் முன்கூட்டியே பதிவு செய்வது அவசியமாகும். மேலதிக தகவல்களுக்கும் பதிவு செய்வதற்கும் fulbrightsrilanka.org/universityfair எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.
அமெரிக்க பல்கலைக்கழகங்களின் வலிமையையும், புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் அவை வகிக்கும் பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர், “குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகள் உட்பட, உயர்கல்வியிலும், புத்தாக்கத்திலும் உலகளாவிய ரீதியில் அமெரிக்கா முன்னணியிலுள்ளது. இக்கண்காட்சிகளில் பங்கேற்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வளர்ந்துவரும் இவ்வாறான துறைகளில் அக்கல்வி நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க நிபுணத்துவம் ஆகியவற்றினூடாக, அத்தலைமைத்துவத்தை காட்சிப்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” எனத் தெரிவித்தார்.
“எமது இரு நாடுகளுக்குமிடையிலான கல்விசார் உறவுகளை பலப்படுத்தும் அதேவேளை, கல்விக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் இக்கண்காட்சிகள் இலங்கை மாணவர்களை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடன் நேரடியாக இணைக்கின்றன.” என US-SLFCஇன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெற்ரிக் மெக்னமாரா கூறினார்.
கண்காட்சியில் பங்கேற்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்
இக்கண்காட்சிகளில் பங்கேற்கும் பதினொரு கல்வி நிறுவனங்களும் அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன:
1 எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் — எல் பாசோ, டெக்சாஸ்
2 வட டகோட்டா மாநில பல்கலைக்கழகம் — ஃபார்கோ, வட டகோட்டா
3 ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகம் — ஃபெயட்வில், ஆர்கன்சாஸ்
4 வெர்மொன்ட் பல்கலைக்கழகம் — பேர்லிங்டன், வெர்மொன்ட்
5 பௌலிங் கிரீன் மாநில பல்கலைக்கழகம் — பௌலிங் கிரீன், ஒஹாயோ
6 டெனஸ்சி பல்கலைக்கழகம், நொக்ஸ்வில் — நொக்ஸ்வில், டெனஸ்சி
7 ஃபிஷர் கல்லூரி — பொஸ்டன், மஸசூசெட்ஸ்
8 மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம் — ஈஸ்ட் லான்சிங், மிச்சிகன்
9 நிவ்யோர்க் பல்கலைக்கழகம் — நிவ்யோர்க் நகரம், நிவ்யோர்க்
10 பேய்லர் பல்கலைக்கழகம் – வெக்கோ, டெக்சாஸ்
11 ஓல்பிரைட் கல்லூரி – ரீடிங், பென்சில்வேனியா
கண்காட்சி நடைபெறும் கால அட்டவணை
|
திகதி |
நகரம் |
இடம் |
நேரம் |
|
செப்டெம்பர்
14 |
கொழும்பு |
கிராண்ட்
சபாயர் போல்ரூம், கோர்ட்யார்ட் பை மெரியட் கொழும்பு. |
1:00-4:00 பி.ப. |
|
செப்டெம்பர்
16 |
குருநாகல் |
ரோயல்
சர்வதேச பாடசாலை |
2:15-3:15 பி.ப. |
|
செப்டெம்பர்
17 |
கண்டி |
கண்டி
சிட்டி சென்டர், விருந்து மண்டபம் |
1:00-4:00 பி.ப. |
EducationUSA பற்றி:
அமெரிக்காவில் உயர்கல்வியினைத் தொடர விரும்பும் இலங்கையிலுள்ள மாணவர்களுக்கு இலவச ஆலோசனை சேவைகளை EducationUSA வழங்குகிறது. நாட்டமுடைய தனிநபர்கள் 4,000இற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்கக் கல்வி நிறுவனங்களுக்கான விண்ணப்ப நடைமுறைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தமது கல்விப் பயணத்தைத் திட்டமிடுவதற்கும் உதவிசெய்யும் EducationUSA ஆலோசகரூடாக EducationUSA Sri Lanka வழிகாட்டல்களை வழங்குகிறது. அமெரிக்காவில் உயர்கல்வி கற்பது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கையிலுள்ள ஒரேயொரு உத்தியோகபூர்வ மூலம் இதுவாகும். இலங்கையிலுள்ள EducationUSA தொடர்பான மேலதிக தகவல்களுக்கு fulbrightsrilanka.org/educationusa-advising எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடவும்.
அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவைப் பற்றி:
US-SLFC என்பது, 1952ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நிதியளிக்கப்படும், தன்னாட்சியுடைய, இரு-நாடுகளுக்கிடையிலான ஒரு அமைப்பாகும். கடந்த ஏழு தசாப்தங்களாக, ஃபுல்பிரைட் இலங்கை (Fulbright Sri Lanka) 2,000இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்கான கல்விசார் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்து, இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர புரிதலை வளர்த்துள்ளது. US-SLFC தொடர்பான மேலதிக தகவல்களுக்கு fulbrightsrilanka.org எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடவும்.
இப்பல்கலைக்கழகக் கண்காட்சி குறித்த செய்திகளை வெளியிட விரும்பும் ஊடகத்துறையினர், [email protected] எனும் முகவரியூடாகத் தொடர்பு கொள்ளவும்.