January 27 (Citizen.lk News) - நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளில் நாளை புதன்கிழமை (28) காலை 8 மணி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது, அனைத்து கதிரியக்க பரிசோதனைகள், சிடி (CT) ஸ்கேன், எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன், மேமோகிராம் (MEMMOGRAM) ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை அறைகளில் கதிர்வீச்சைப் பயன்படுத்தும் அறுவை சிகிச்சைகள் நாளை இடைநிறுத்தப்படும் என சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு சரியான தீர்வு காணத் தவறியதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாளிகாவத்தை வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு கதிரியக்க பரிசோதனைகளை நடத்தும் தகுதியற்ற பணியாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.